பொது

மீண்டும் தொடங்கியுள்ளது தேசிய சேவை பயிற்சித் திட்டம்

12/01/2025 07:03 PM

கோலாலம்பூர், 12 ஜனவரி (பெர்னாமா) - ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ள PLKN 3.0 எனும் மூன்றாவது தேசிய சேவை பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக தன்னார்வ அடிப்படையில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 120 பேர் கோலாலம்பூரில் உள்ள KEM REJIMEN இராணுவ முகாம் வந்து சேர்ந்துள்ளனர். 

18 தொடங்கி 25 வயதுக்குட்பட்ட 80 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் என்று அவர்கள்   இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 25ஆம் தேதிவரை 45 நாட்களுக்கு அங்கு இராணுவ மற்றும் தேசிய பயிற்சியைப் பெறுவார்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் முகாமிற்கு வந்த சம்பந்தப்பட்ட பயிற்சியாளர்களுக்கான பதிவு காலை 7 முதல் 11 மணிவரை சுமூகமாக நடைபெற்றது.

உடல் மற்றும் உளப்பயிற்சி அனுபவங்கள் மூலம் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள மலேசிய இளைஞர்களை ஊக்குவிக்கவும் தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு மற்றும் அடையாள உணர்வை அதிகரிக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் கட்டம் கட்டமாக மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. 

தேசிய சேவை பயிற்சி சட்டம், சட்டம் 628, தேசிய பாதுகாப்பு கொள்கை DKN, தற்காப்பு வெள்ளை அறிக்கை KPP உடன், தேசிய சேவை பயிற்சியின் முதன்மை மற்றும் வெற்றி கூறுகள் என்று இரண்டு முக்கிய கூறுகள் தொடர்புடைய கொள்கை அடிப்படையில் இந்த PLKN 3.0 திட்டம் உருவாக்கப்பட்டது. 

சோதனைப் பயிற்சிக்குப் பிறகு, PLKN 3.0 இன் அடுத்த கட்டத்தில், 13 வட்டார இராணுவ முகாம்கள், 20 பொதுப் பல்கலைக்கழகங்கள், 33 பாலிடெக்னிக்குகள், 27 ஆசிரியர் பயிற்சி கழகங்கள் IPG, பல பொதுத் திறன் பயிற்சி கழகங்கள் ILKA அல்லது தொழில்துறை பயிற்சி கழகங்கள் ILP ஆகியவை நாடு முழுவதும் PLKN அடிப்படை பயிற்சிக்கான இடங்களாகப் பயன்படுத்தப்பட உள்ளன.

மூன்று மாத கால பயிற்சியாக, 2003ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் ஒவ்வோர் ஆண்டும் 85 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பயிற்சியாளர்களை உருவாக்கி உள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)