சிப்பாங், 11 ஜனவரி (பெர்னாமா) -- தமது மகனை சம்பந்தப்படுத்திய கொலை மிரட்டல் தொடர்பான விசாரணையை முழுமையாக அமலாக்க தரப்பிடமே ஒப்படைப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருக்கிறார்.
மலேசியர்கள் அனைவரும் எந்தவொரு விதிவிலக்குமின்றி, நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
''எனது மகன் சட்டத்தை மீறவில்லை. அவர் மீது புகார் இருந்தால் அதனை வெளிப்படையாகவும், நியாயமாகவும் விசாரிக்க வேண்டியது போலீசாரரின் கடமை ஆகும். தேசிய போலீஸ் படைத் தலைவரின் முந்தைய அறிக்கையின்படி, விசாரணை அறிக்கை நிறைவுப் பெற்று, தேசிய சட்டத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. எனவே, உரிய செயல்முறை தொடரட்டும். எனது மகன் உட்பட அனைவரும் சட்ட விதிகளில் இருந்து விடுபட முடியாது என்பது எனது கொள்கை ஆகும். விசாரணைக்கு அடிப்படை இருந்தால், உரிய செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்றார் அவர்.
கே.எல்.ஐ.ஏ-இன், முதலாவது முனையத்தில், MyBorderPass QR குறியீட்டு வாயிலையும் Smart Q அமைப்பையும் பார்வையிட்ட பின்னர், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சைஃபுடின் அவ்வாறு கூறினார்.
அமைச்சர் ஒருவரின் மகன் சம்பந்தப்பட்ட மிரட்டல் சம்பவம் குறித்த தகவல்கள் கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அதன் விசாரணையை போலீசார் முடித்துவிட்டதாக, போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)