உலகம்

லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீ; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்

12/01/2025 07:49 PM

அமெரிக்கா, 12 ஜனவரி (பெர்னாமா) -- லாஸ் ஏஞ்சல்சின் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ, காற்று உள்ளிட்ட வானிலை காரணமாக நிலைமையை மோசமாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியா பல்கலைக்கழக வானிலை ஆய்வாலர் டேனியல் ஸ்வைன் அச்சம் தெரிவித்துள்ளார்.

''இந்தத் தீ விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைப் பொறுத்தவரை, இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டு தீ விபத்துகளுக்கும் இடையில் தற்போது சுமார் 10 முதல் 15 பேர் வரை இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவுகளின்படி மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது. நடந்ததை வைத்துப் பார்க்கும்போது, ​​அது பத்துக்கும் மேற்பட்ட அல்லது நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இல்லாதது ஒரு சிறிய அதிசயம் என்று நான் இன்னும் நினைக்கிறேன். இறப்பு எண்ணிக்கை தற்போது இருப்பதை விட அதிகமாக இருக்கலாம். ஆனால், அது மூன்று இலக்கங்களுக்கு உயராது என்று நான் நம்புகிறேன்,'' அவர் கூறினார்.

இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை தீ பரவத் தொடங்கியதில் இருந்து, மின்சார விநியோகத் தடை, குடியிருப்பாளர்களை வெளியேற்றுதல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இவ்விபத்து வழிவகுத்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் ஆறு காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன

அதில், கிட்டத்தட்ட 10,000 கட்டமைப்புகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

தற்போது, ​​சுமார் ஒரு லட்சத்து 53,000 குடியிருப்பாளர்களுக்கு தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 57,000 கட்டமைப்புகள் ஆபத்தில் உள்ளன.

இதனிடையே, , லாஸ் ஏஞ்சல்சுக்கு அருகில் இருக்கும் பசிபிக் பாலிசேட்ஸ்சில் ஏற்பட்ட காட்டுத்தீ ஒரே இரவில் கூடுதலாக 1,000 ஏக்கர் பகுதிக்கு பரவியதைத் தொடர்ந்து, விமானங்களைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலிசேட்ஸ் தீ, மாண்டேவில் கனியன் பகுதிக்கும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த 72 மணி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தீ பரவுவது அதிகரிக்கக்கூடும் என்பதால், முழு அளவிலான தீயணைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள வீடுகளைப் பாதுகாக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோசமான வானிலை நேற்று மாலை தொடங்கி புதன்கிழமை வரை நீடிக்கும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புப் படை தலைவர் அந்தோணி சி. மர்ரோன் தெரிவித்தார்

மற்றொரு நிலவரத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை கலிஃபோர்னியா காட்டுத்தீ தொடங்கியதிலிருந்து, பசடேனா ஹ்யூமன் என்ற விலங்குகள் பராமரிப்பு நிறுவனத்தின் மீட்கப்பட்ட விலங்குகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்கொடைகள் குவிந்துள்ளன.

இந்தக் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட விலங்குளைப் பாதுகாக்க மக்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

இத்தீ விபத்துகளால் இடம்பெயர்ந்த நாய்கள், குதிரைகள், கழுதைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பிற உயிரினங்களையும், அவற்றின் உரிமையாளர்களையும் மீட்டு விலங்கு வசதிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் மீட்பு அமைப்புகள் உதவி செய்து வருகின்றனர்.

இதுவரை பசடேனா ஹ்யூமன்னில் 400க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)