பத்துமலை, 09 ஜனவரி (பெர்னாமா) -- தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளை ஊக்குவிக்கவும், மேலும் பல சாதனைகளையார்களை உருவாக்கவும் நாட்டில் பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் மற்றும் அரசாங்கம் சார்பற்ற அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
விளையாட்டு, அறிவியல், கல்வி போன்ற துறைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த விவாத திறன் கொண்டவர்கள் என்ற முத்திரையைப் பதிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட மாணவர் முழக்கம் போட்டியின், 2024-ஆம் ஆண்டிற்கான இறுதி சுற்று, நேற்று நடைப்பெற்றது.
மாணவர்களின் திறமைக்கு நல்லதொரு களமாக விளங்கும் மாணவர் முழக்கம் போட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டில் வணக்கம் மலேசியா இணைய செய்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டது.
அன்று தொடங்கி தற்போது வரை, இப்போட்டிக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வழங்கி வரும் ஆதரவு தங்களுக்கு மனநிறைவை அளிப்பதாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி கூறினார்.
''இளைய சமுதாயத்தின் அடையாளங்களை முன்நிறுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய முக்கிய நோக்கம். அதற்காகதான் நாம் தொடர்ந்து இந்தப் போட்டியைச் செய்து வருகின்றோம். இதில் நாம் எடுத்துக் கொண்ட நோக்கத்தை அடைந்திருக்கின்றோம் என்ற அடையாளம்தான் பிரம்மாண்டமாக அரங்கேறிய மாணவர்கள் படைப்பு, ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு போட்டியை மட்டும் நடத்தாமல் அவர்களுக்கு பட்டறையை நடத்தி பேச்சுக் கலையை எப்படி வளர்ப்பது என்று பல்வேறு நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்திருகின்றோம்,'' என்றார் அவர்.
போட்டியின் தொடக்கமாக, நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையம் வழி தங்களின் படைப்புகளை அனுப்பினர்.
அவர்களிலிருந்து 40 மாணவர்கள் காலிறுதி சுற்றுக்கும்,14 மாணவர்கள் அரையிறுதி சுற்றுக்கும் தேர்வாகினர்.
அவர்களில், 4 மாணவர்கள் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், தங்களின் வாதத் திறமையால் இறுதி சுற்று வரை தேர்வு பெற்று, வெற்றிப் பெற்ற மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியைப் பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டனர்.
''இந்த மாதிரி நான் வெற்றிப் பெற வேண்டும் என்பது என் பெற்றோர்களின் ஆசை. ஆசிரியர்களின் ஆசையும் கூட. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார் ஷஷ்மிதா வசந்த்குமார்.
''இதுதான் முதல் முறை.இறுதி சுற்று வரைக்கும் வந்தது.'' என்றார் ரக்ஷனா பூபாலன்.
அதோடு, அனல் பறக்கும் பேச்சால், நடுவர்களைக் கவர்ந்து 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் முழக்கத்தின் வெற்றிக் கோப்பையையும் தலா 3000 ரிங்கிட் ரொக்க தொகையையும் ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் செஷ்வின் ராவ் ஆனந்தன் தட்டிச் சென்றார்.
''நான் நான்காம் ஆண்டில் தேர்வுச் சுற்றிலும் மற்றும் காலிறுதி சுற்றிலும் தேர்வானேன். காலிறுதி சுற்று எப்படி இருக்கும் என்றே தெரியாது. அது எனக்கு புதிய அனுபவம். அதனை இந்த ஆண்டும் பயன்படுத்தினேன். இவ்வாண்டு ஆறாம் ஆண்டு பயில்கிறேன். இந்த ஆண்டில் எதாவது சாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணம்,'' என்றார் செஷ்வின்.
இதனிடையே, வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி தங்களைச் சார்ந்த பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமையைச் சேர்த்திருப்பது குறித்து அவரின் ஆசிரியர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
''உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் மீள்திறன் மாணவர்கள். நாங்கள் எதிர்நோக்கிய சவால்கள் ஏராளம். மாணவர்களுக்கு கிடைக்கின்ற நேரத்தில் பயிற்சியைக் கொடுத்தோம்,'' என்று ஜோகூர், தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நாகேஸ்வரி ஹரிதாஸ் தெரிவித்தார்.
அரையிறுதி சுற்றுவரைத் தேர்வுப் பெற்று, வளரும் பேச்சாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 5 மாணவர்களுக்கும் வெற்றி கோப்பையும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.
நேற்று, சிலாங்கூர், பத்துமலை திருத்தலத்தில் உள்ள ராமாயணம் குகையில் நடைபெற்ற 12-ஆவது தேசிய ரீதியிலான மாணவர் முழக்கம் போட்டியில் 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)