ஈப்போ, 09 ஜனவரி (பெர்னாமா) -- தமிழர் திருநாளான பொங்கலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே எஞ்சி இருக்கும் வேளையில், பொங்கல் பானைகளின் விநியோகம் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அதில் பேராக், ஈப்போவில் உள்ள BERCHAM-இல் செயல்பட்டு வரும் மண் பானை தயாரிப்பு நிறுவனத்தின் பொங்கல் பானைகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பயனீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
கடந்த 15 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பொங்கல் பானைகள் மற்றும் மண்ணால் செய்யப்படும் பாண்டங்களை விற்பனை செய்து வந்தவர் ராமசந்திரன் சோலை.
அதன் பின்னர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக தொழிற்சாலையை தொடங்கி, அதன் தயாரிப்பு துறையில் தொடர்ந்து வெற்றிக் கண்டு வருகிறார்.
''மண் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் நாங்கள் வைத்திருக்கின்றோம். சுமார் 25 ஆண்டுகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். 15 ஆண்டுகளாக பிறரிடம் வாங்கி பொருட்களை விற்பனை செய்தோம். கடந்த 10 ஆண்டுகளாக, சொந்தமாக இத்தொழிலை செய்து வருகின்றோம். பொங்கல் பானை உட்பட மண் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும்,'' என்றார் ராமசந்திரன்
பொங்கல் பானைகள் விற்பனைத் துறையில் முன்னணி வகித்து வரும் தமது நிறுவனத்தில், பல வகையான பொங்கல் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.
அவை உறுதியாகவும், நேர்த்தியாகவும் இருப்பதோடு தரமாகவும் இருப்பதால், சிறந்த வரவேற்பு கிடைப்பதாக ராமசந்திரன் குறிப்பிட்டார்.
மேலும், காலத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் பொருட்கள் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அமைவதாக அவர் கூறினார்.
இதனிடையே, பல நாடுகளில் இருந்து அதற்கான கோரிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ராமசந்திரன் தெரிவித்தார்.
''நாங்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதோடு, இந்தோனேசியா மேடானுக்கும் செய்கின்றோம். அதோடு, ஆஸ்திரேலியா மெல்பெர்னுக்கு ஏற்றுமதி செய்கிறோம். பொங்கலுக்கும் 20 அடி கொள்கலனில் பொருட்களை அனுப்பி வைத்துள்ளோம்,'' என்றார் ராமசந்திரன்
புறநகர் மட்டும் அல்லாமல், நகர்புறங்களிலும் பலர் பாரம்பரியத்தை பின்பற்றி பொங்கலுக்கு மண்பானையை பயன்படுத்துவதால் வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதோடு தங்களது தொழிலும் சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)