விளையாட்டு

துபாய் கார் பந்தயத்தில் அஜித் அணி மூன்றாம் இடம்

12/01/2025 08:31 PM

துபாய்,12 ஜனவரி (பெர்னாமா) -- துபாயில் நடைபெற்ற 24 மணிநேர கார் பந்தயப் போட்டியில், களமிறங்கிய நடிகர் அஜித்குமார்  அணி, 992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 

அந்த வெற்றியை அஜித்குமார்  இந்தியாவின் தேசக் கொடியுடன் கொண்டாடி தமது ரசிகர்களைப் பரவசமடையச் செய்துள்ளார். 

திரைப்படங்களில் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் அஜித்குமார் மோட்டார்  மற்றும் கார் பந்தயம் தொடர்பான போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவரும் ஆவார். 

முன்பு FORMULA போட்டிகளில் பங்கேற்று வந்த அவர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு கார் பந்தயத்திலும் பங்கேற்கவில்லை.

வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் பந்தயத்தில் களம் கண்ட அஜித் தமது அணியுடன் துபாய் போட்டியில் பங்கேற்றார். 

24 மணிநேரங்கள் நீடித்த இப்போட்டில், அஜித்தின் அணி பல தடைகளுக்குப் பின்னர் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. 

அவரது வெற்றியை தமிழக ஊடகங்களும், அஜித் ரசிகர்களின் சமூக ஊடகங்களும் கொண்டாடி  மகிழ்கின்றன. 

இப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சில தினங்களுக்கு முன்னர் அவரின் கார் தடுப்பில் மோதி, விபத்தில் சிக்கியது. 

உள்ளே அமர்ந்திருந்த அஜித் கவசங்கள் அணிந்திருந்ததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து கவலையில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் காணொளி  ஒன்றை அஜித்குமார் நேற்றிரவு வெளியிட்டார். 

துபாய் கார் பந்தயம் மட்டுமின்றி ஐரோப்பியாவில் நடைபெறும் ஐரோப்பிய 24H, போர்சே 992GT ஆகிய கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் பங்கேற்க உள்ளார்.

-- பெர்னாமா