பொது

எம்.ஆர்.எஸ்.எம்: கல்வியைத் தொடர்வதற்கு 8,909 மாணவர்களுக்கு வாய்ப்பு

13/01/2025 04:09 PM

கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- 2025ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணைக்கு எம்.ஆர்.எஸ்.எம் எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் தங்களின் கல்வியைத் தொடர்வதற்குப் படிவம் 1 மற்றும் 4 பயிலும் 8,909 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

குறைந்தபட்ச தகுதிகளைப் பூர்த்தி செய்தல், எம்.ஆர்.எஸ்.எம் நுழைவுத் தேர்வான யு.கெ.கெ.எம்மில் தேர்ச்சி பெறுதல் மற்றும் பிற குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததன் அடிப்படையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டதாக மாரா தலைவர் டத்தோ அஸ்ராஃப் வாஜிடி டுசுகி கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்கள் மற்றும் புறநகரைச் சேர்ந்த மாணவர்களுக்கு எம்.ஆர்.எஸ்.எம்மில் 60 விழுக்காடு வாய்ப்பு வழங்குவதில் மாரா தொடர்ந்து அதன் கடப்பாட்டில் உறுதியை நிலைநாட்டுவதாக அஸ்ராஃப் வாஜிடி கூறினார்.

"இந்த ஆண்டு, படிவம் 1 மற்றும் 4 சேர்க்கைக்கு மொத்தம் 93,635 விண்ணப்பங்களை மாரா பெற்றுள்ளது, அதில் 8,909 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையில், படிவம் 1-இல் பயிலும் 7,229 மாணவர்களுக்கும் , படிவம் 4-இல் பயிலும் 1,680 மாணவர்களுக்கும் எம்ஆர்எஸ்எம் செல்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, " என்றார் அவர்.

திங்கட்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற மாரா ஒருங்கிணைந்த கணக்கியல் மாநாடு, MiCA-வில் கலந்துக் கொண்ட பின்னர் அஸ்ராஃப் வாஜிடி அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)