பிரயாக்ராஜ், 13 ஜனவரி (பெர்னாமா) -- உலகின் மிகப் பெரிய மக்கள் கூட்டம் திருவிழாவாகக் கருதப்படும் மகா கும்பமேளாவைத் தொடங்குவதற்காக ஆன்மீகவாதிகள், துறவிகள் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான இந்துக்கள் இன்று வடக்கு நகரமான பிரயாக்ராஜில் திரண்டனர்.
இத்திருவிழாவில் நான்கு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்று தொடங்கிய கும்பமேளாவின் போது சூரிய உதயத்துக்கு முன்னர் பக்தர்கள் நதியில் நீராடினர்.
சூரியோதயம் நதி நீரில் பட்டு் மிக அழகாகவும் வண்ணமயமானதாகவும் காட்சி அளித்தது.
இன்று தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை அடுத்த ஆறு வாரங்களுக்கு, பக்தர்கள் மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கூடுவர்.
அவர்கள் அங்கு நடைபெறும் சடங்குகளில் பங்கேற்பர்.
வரலாற்று ரீதியாக கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகா கும்பமேளா பிரம்மாண்டமாக நடைபெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)