ஜோகூர்பாரு, 18 டிசம்பர் (பெர்னாமா) - GISB குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நசிருடின் முஹமட் அலி மற்றும் அவரின் துணைவியார் டத்தின் அஸுரா முஹமட் யூசுப் ஆகியோர் தங்களை சட்டவிரோத காவலில் வைத்ததற்காக செய்த habeas corpus எனப்படும் ஆட்கொணர்வு மனு மீதான தொடக்க ஆட்சேபனை முடிவிற்கு, ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியை இன்று நிர்ணயித்தது.
2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அம்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பின்னர் நீதிபதி டத்தோ அபு பாக்கார் காத்தார் அம்முடிவைச் செய்தார்.
மனுதாரர்களை விடுவிப்பதற்காக, நீதித்துறை அமைப்பை 'பின்கதவாக' பயன்படுத்தும் முயற்சிதான் இந்த விண்ணப்பம் என்றும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்களான முஹமட் ஃபிர்டாவுஸ் சடானி அலி, முஹமட் சைன் இப்ராஹிம் மற்றும் நூர் ஷாஹிடான் முஹமட் கமில் ஆகியோர் வாதிட்டனர்.
சம்பந்தப்பட்ட மனுதாரர்கள், habeas corpus மனுவைத் தாக்கல் செய்தற்குப் பதிலாக, நீதிமன்ற சீராய்வு அல்லது தங்களின் தடுப்புக்காவலை சவால் செய்யும் இதர பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
இதனிடையே, மனுதாரர்களின் habeas corpus மனு, தொடக்க ஆட்சேபனையை
முறியடித்தால் அரசு தரப்பு அதன் தகுதியின் அடிப்படையில் வாதங்களைச் சமர்ப்பிக்கும் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்றிருக்கும் டத்தோ ரோஸ்லி கமாருடின் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)