பொது

இங்கிலாந்து பிரதமரைச் சந்திக்கவிருக்கும் அன்வார்

15/01/2025 02:34 PM

லண்டன், 15 ஜனவரி (பெர்னாமா) --   பிரிட்டனுக்கு ஐந்து நாள்கள் அலுவல் பயணத்தைத் தொடங்கியிருக்கும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது சகாவான கீர் ஸ்டார்மரைச் சந்திக்கவுள்ளார்.

அந்நாடு உள்ளூர் நேரப்படி பிற்பகல் மணி ஒன்று அல்லது மலேசிய நேரப்படி இரவு ஒன்பது மணிக்கு லண்டன், DOWNING STREET-இல் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அவர்களின் சந்திப்பு நடைபெறும்.

மலேசியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இருவழி உறவுகளுக்குப் புத்துயிர் அளித்து, மேலும் வலுப்படுத்துவது குறித்து அவ்விரு தலைவர்களும் கவனம் செலுத்தவுள்ளனர்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு சஃரூல் அப்துல் அசிஸ், உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர், தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி உட்பட பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்துக்கான மலேசிய தூதர் டத்தோ சக்ரி ஜாஃபார் ஆகியோர் பிரதமருடன் இணைந்து இப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இரு தலைவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இச்சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் உட்பட மியன்மார் மற்றும் பாலஸ்தீனத்தின் நிலைமை குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தியிருக்கும் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், காசா மற்றும் மேற்குக் கரைக்கு மனிதாபிமான உதவியைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)