பொது

நாட்டில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு சிற்றரசு நிறுவனங்களுக்கு மலேசியா அழைப்பு

15/01/2025 05:19 PM

அபு தாபி, 15 ஜனவரி (பெர்னாமா) --   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தி.பி.பி மற்றும் தரவு மையங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்யுமாறு, ஐக்கிய அரபு சிற்றரசைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஐக்கிய அரபு சிற்றரசிற்கு மூன்று நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டின் நிதி நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்தியதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பசுமை எரிசக்தி, உள்கட்டமைப்பு, முதன்மை மின்கலன் உட்பட மின்சார வினியோக அமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய திட்டங்களில், மஸ்டார் எனும் அந்நாட்டு நிறுவனம் முதலீடு செய்வதை அரசாங்கம் எளிதாக்கவிருப்பதாக, அந்நிறுவனத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் பிரதமர் கூறினார்.

''ஜோகூர்-சிங்கப்பூர் பொருளாதார மண்டலத்தைத் தவிர்த்து கெரியானில் செயல்படும் புதிய ஆற்றல் உயர் தொழில்நுட்பம் கிஜிப்பில் (KIGIP) திட்டங்களை மேற்கொள்ள நாங்கள் ஊக்குவிக்கிறோம்'', என்று அவர் கூறினார்.

ஐக்கிய அரபு சிற்றரசிற்கு மேற்கொண்ட அலுவல் பயணத்தை நிறைவு செய்த அன்வார், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

உள்கட்டமைப்பு, பசுமை தொழில்நுட்பம், தி.பி.பி, தளவாடங்கள், சுகாதாரம், இலக்கவியல் பொருளாதாரம் உட்பட கல்வி மேம்பாட்டையும் இது உள்ளடக்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)