ஜாலான் சுல்தான் சலாஹுடின், 15 ஜனவரி (பெர்னாமா) -- 2012-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பி.ஐ.எம் எனப்படும் கட்டடத் தகவல் மாதிரி அமைப்பைப் பயன்படுத்தி நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் நிறைவுப் பெற்றுள்ளன.
இது, ஒவ்வோர் ஆண்டும் பி.ஐ.எம்மின் 10 விழுக்காட்டு பயன்பாட்டை இலக்காகக் கொண்டுள்ள பொதுப்பணித் துறையின் வியூகத் திட்டத்திற்கு ஏற்ப உள்ளதாக, பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
''12-வது மலேசிய திட்டத்தின் நான்காவது சுழல் திட்டத்தில் பி.ஐ.எம்-ஐ பயன்படுத்தி 400 கட்டுமான திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதனால் செலவுகள் குறைக்கப்படுவதோடு கட்டுமானம் விரைவுபடுத்துவதும் அதன் நன்மைகளில் அடங்குகிறது'', என்று அவர் கூறினார்.
இன்று, கோலாலம்பூரில் 2024-ஆம் ஆண்டு ஜே.கே.ஆர் பி.ஐ.எம் பயண நிகழ்ச்சியை நிறைவுச் செய்தப் பின்னர் அஹ்மாட் மஸ்லான் செய்தியாளர்களிடம் பேசினார்.
கட்டுமானத் துறையில் பி.ஐ.எம் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு, பி.ஐ.எம் மென்பொருளை நாட்டில் உள்ள நிபுணர்கள் அதிகளவில் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)