மெல்பர்ன், 15 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் மூன்றாவது ஆட்டத்திற்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறினார்.
இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றில், அவர் போர்த்துகலின் ஜெய்ம் ஃபரியாவுடன் விளையாடினார்.
உலகின் முதல் தரவரிசையில் உள்ள நோவக் ஜோகோவிச் எளிதாக வெற்றிப் பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், இவ்வாட்டத்தில் அவர் கடுமையான சவாலை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-1 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றி பெற்ற ஜோகோவிச், இரண்டாம் செட்டில் 6-7 என்று தோல்வியைத் தழுவினார்.
இருப்பினும் அடுத்த இரண்டு செட்களில் 6-3, 6-2 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று, ஜோகோவிச் தமது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ஆடவர் ஒற்றையருக்கான மற்றோர் ஆட்டத்தில் வெற்றி பெற்று சார்லஸ் அல்கராஸ் மூன்றாவது ஆட்டத்திற்குத் தேர்வாகினார்.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவுடன் மோதிய அவர், 6-0, 6-1, 6-4 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றியை பதிவு செய்தார்.
இவர்களின் ஆட்டம் ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த அல்கராஸ், போர்த்துகலின் நுனோ போர்ஹெஸுடன் விளையாடவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)