பொது

40 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்; நால்வர் கைது

17/01/2025 06:42 PM

ஜோகூர் பாரு, 17 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் ஜோகூர் பாருவில் உள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 40 லட்சத்து 30ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகை போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நால்வரைப் போலீசார் கைது செய்தனர்.

20இல் இருந்து 30 வயதிற்குட்பட்ட உள்நாட்டு ஆடவர்கள் இருவர் மற்றும் வியாட்நாமிய பெண்கள் இருவர், கைது செய்யப்பட்டவர்களாவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.

அம்மாவட்டத்தில் போதைப் பொருள்களை விநியோகிப்பதற்கு முன்பதாக, அவற்றை பதுக்குவதற்கும் பொட்டலமிடுவதற்கும் அக்கும்பல் அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளைப் பயன்படுத்தி வந்ததாக டத்தோ எம்.குமார் கூறினார்.

அக்கும்பல் கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து செயல்பட்டு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

''இந்த மோசடி கும்பலின் பொட்டலமிடும் முறை தற்போது மாறிவிட்டது. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. கவனத்தை ஈர்க்க அவர்கள் 3D வடிவிலான பொட்டலமிடும் முறையைப் பயன்படுத்தினர், '' என்றார் அவர்.

இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ குமார் அவ்வாறு கூறினார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, 1952ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39Bஇன் கீழ் அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)