செத்தியூ, 24 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலா திரெங்கானு–கோத்தா பாரு சாலை, கிலோமீட்டர் 62டில் கம்போங் ரஹ்மட் அருகில் மேற்கொள்ளப்பட்ட சாலை போக்குவரத்து சோதனை நடவடிக்கையின்போது, 78 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 244 கிலோகிராம் எடையுள்ள ஷாபு வகை போதைப் பொருளைத் திரெங்கானு மாநில போலீசார் கைப்பற்றினர்.
இவ்வாண்டு திரெங்கானு மாநிலத்தில் கைப்பற்றப்பட்ட அதிக மதிப்பிலான போதைப் பொருள் இதுவாகும் என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் கைரி கைருடின் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9 அளவில், 30 வயதிற்குட்பட்ட ஆடவரால் விட்டுச் செல்லப்பட்ட தோயோத்தா வெல்ஃபயர் ரக எம்.பி.வி வாகனத்தில் அந்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக இன்று, திரெங்கானு, செத்தியூ மாவட்டத்தின் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முஹமட் கைரி தெரிவித்தார்.
உள்நாட்டு ஆடவர் என்று நம்பப்படும் அச்சந்தேக நபர், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தாம் செலுத்தி வந்த எம்.பி.வி ரக வாகனத்தை நிறுத்தி தப்பிச் சென்றதாக அவர் விளக்கினார்.
அவ்வாகனத்தை நோக்கி போலீசார் செல்வதை உணர்ந்த அவ்வாடவர், அருகிலுள்ள செம்பனை தோட்டத்திற்குள் தப்பி ஓடியிருக்கிறார்.
ஷாபு வகை போதைப்பொருள் என்று நம்பப்படும் படிகங்கள் அடங்கிய வெள்ளி மற்றும் தங்கள் நெகிழிப் பாக்கெட்டுகள் நிரம்பிய சாக்கு மூட்டையைப் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
"கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த எடை 244 கிலோகிராம். இதனை 12 லட்சம் பேர் தவறாக பயன்படுத்தலாம். கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் மதிப்பு 75 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் ஆகும், " என்றார் அவர்.
1952ஆம் ஆண்டு, போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39Bஇன் கீழ் இக்குற்றம் விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)