மெல்போர்ன், 19 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலியின் யென்னிக் சின்னர் வெற்றிகரமாக காலிறுதி ஆட்டத்தில் கால் வைத்தார்.
நடப்பு வெற்றியாளரான அவர், மூன்றாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரோனை வீழ்த்தினார்.
உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான யென்னிக் சின்னர், முன்னதாக இரண்டாவது சுற்றின் போது உபசரணை நாட்டின் டிரிஸ்டன் ஸ்கூல்கேட் உடனான ஆட்டத்தில் ஒரு செட்டில் தோல்வி கண்டிருந்தார்.
ஆனால், இந்த மூன்றாம் சுற்றில், இரண்டு மணி நேரம் ஒரு நிமிடத்தில் 6-3, 6-4, மற்றும் 6-2 என்ற தமது வெற்றியை உறுதிப்படுத்தினார்.
உலகத் தர வரிசையில் 42-வது இடத்தில் இருக்கும் மார்கோஸ் ஜிரோனின் முயற்சிகளை அவர் லாவகமாக தடுத்து நிறுத்தினார்.
23 வயதான சின்னர் அடுத்தச் சுற்றில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனைச் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி முதன்முறையாக தனது கிராண் ஸ்லாம் பட்டத்தை வென்ற சின்னர் அதனைக் தற்காப்பதில் குறியாக உள்ளார்.
இதனிடையே, ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் உலகின் முதன் நிலை வீராங்கனையான அரினா சபாலென்காவும் காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
மூன்றாம் சுற்று ஆட்டத்தில் அவர் உலகத் தர வரிசையில் 14-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவுடன் களம் கண்டார்.
அதில், 6-1, 6-2 என்று மிக எளிதில் எதிராளியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)