உலகம்

மகா கும்பமேளாவில் குறைந்தது 18 தற்காலிக கூடாரங்கள் தீக்கிரை

20/01/2025 06:09 PM

பிரயாக்ராஜ், 20 ஜனவரி (பெர்னாமா) -- இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள Prayagraj நகரில் கோடி கணக்கான மக்கள் திரண்டிருக்கும் மகா கும்பமேளாவில் குறைந்தது 18 தற்காலிக கூடாரங்கள் தீப்பற்றி எரிந்தன.

இச்சம்பவத்தில் பொது மக்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

எரிவாயு கலன் வெடித்ததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க உதவியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ஒன்றாக தீயை அணைப்பதால் ஏற்படும் புகை வெளியேற்றத்தைக் கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் காண முடிந்தது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.

இத்திருவிழாவில் தற்போது குறைந்தது 7 கோடியே 70 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் அடுத்த ஆறு வாரங்களில் மொத்தம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, திருவிழாவிற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான மக்கள், பக்தர்கள், சுற்றுப்பயணிகள் ஆகியோர் தங்குவதற்காக ஆற்றங்கரை பகுதியில் ஏற்பாட்டாளர்கள் தற்காலிக கூடாரங்களை நிறுவியுள்ளனர்.

இந்தக் கூடாரங்கள் 3,000 சமையலறைகளையும் 150,000 கழிவறைகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வேளையில் சாலைகள், மின்சாரம், தண்ணீர், தகவல் தொடர்பு கோபுரங்கள், 11 மருத்துவமனைகள் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)