வாஷிங்டன், 20 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்காவில் டிக் டோக் செயலி தடை செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் அது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
இச்செயலியின் தடை உத்தரவை ஒத்தி வைப்பதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்த வேளையில் சுமார் 12 மணிநேர தற்காலிக தடைக்குப் பின்னர் அச்செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இணைய சேவை வழங்குநர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டதோடு, சேவையை மீட்டெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக டிக் டாக் நிறுவனம் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் டிக் டோக் செயலியும் அதன் அகப்பக்கமும் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
'அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்றும் 'மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்' என்றும் குற்றஞ்சாட்டி அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது, 17 கோடி அமெரிக்கர்களும் 70 லட்சம் சிறு வணிகர்களும் பயன்படுத்தும் இச்சேவையைத் தொடர்வதற்கு உதவிய டிரம்பிற்கு டிக் டோக் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)