பொது

மாணவர் இடைநிற்றல் பிரச்சினைக்குக் கல்வி அமைச்சு இவ்வாண்டு முழு கவனம் செலுத்தும்

20/01/2025 05:46 PM

சிக், 20 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு முழுவதும் மாணவர் இடைநிற்றல் பிரச்சினைக்குக் கல்வி அமைச்சு முழு கவனம் செலுத்தவுள்ளது.

இடைநிற்றல் தொடர்பான பிரச்சினை மற்றும் சவாலை ஆராய நாடு முழுவதும் உள்ள 143க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அமைச்சின் உயர் நிர்வாகம் செல்லவுள்ளதாக அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

''பள்ளி வருகைப் பிரச்சினையை முதலில் களைவதற்குக் கவனம் செலுத்த வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து முதலாம் படிவத்திற்குச் செல்வது முதலில் கவனிக்கப்பட வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து முதலாம் படிவத்திற்குச் செல்லும் போது இடைநிற்றல்கள் இல்லை என்றால், அதை மிக எளிதாகச் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், '' என்றார் அவர்.

இன்று கெடா, சிக்கில் உள்ள டங்லாவ் தேசிய பள்ளிக்கு வருகை மேற்கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் 18 வகையான நிதி உதவிகள், இடைநிற்றல் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க உதவும் என்பதையும் கல்வி அமைச்சு ஆராயும் என்று ஃபட்லினா மேலும் தெரிவித்தார்.

பள்ளிகளுக்கான தொடக்க உதவி நிதி பிஏபி தவிர, பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவ வழங்கப்படும் 18 உதவி நிதிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)