பொது

லிமா'25-இல் பங்கேற்க இந்தோனேசியாவுக்கு மலேசியா அழைப்பு

20/01/2025 06:03 PM

ஜாலான் பாடாங் தேம்பாக், 20 ஜனவரி (பெர்னாமா) -- மே 20 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான லங்காவி அனைத்துலக கடல் மற்றும் விண்வெளி கண்காட்சி,லிமாவில் பங்கேற்க இந்தோனேசியாவுக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.

இன்று விஸ்மா பெர்தஹானானில், இந்தோனேசிய தற்காப்பு அமைச்சர் ஸ்ஜாஃப்ரி ஸ்ஜாம்சோடினின் மலேசியாவிற்கான அதிகாரப்பூர்வ வருகையின் போது, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இந்த அழைப்பை விடுத்தார்.

இந்த அழைப்பு, இருவழி மற்றும் பலதரப்பட்ட உறவுகள் அளவில் திட்டங்களை மேற்கொள்வதன் வழி தற்காப்பு துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்று தற்காப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளின் வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை வளர்ப்பதில் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளதை இந்த மரியாதை நிமித்த பயணம் காட்டுகிறது.

இச்சந்திப்பின்போது, வட்டார தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, ஆசியான் 2025திற்குத் தலைமை ஏற்றிருப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)