பொது

1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய விகிதம் - பிப்ரவரி முதல் அமல்

21/01/2025 05:03 PM

கோலாலம்பூர், 21 ஜனவரி (பெர்னாமா) -- 1,500லிருந்து 1,700 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதம் அடுத்த மாதம் முதலாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இருப்பினும், பட்டதாரிகள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியமாக இந்த புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாற்ற வேண்டாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவுறுத்தியுள்ளார்.

''இந்த குறைந்தபட்ச ஊதியத்தை ஆரம்ப ஊதியமாக பார்க்கக்கூடாது என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். குறிப்பாக பட்டதாரிகள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அல்ல. குறைந்த திறன்கள் அல்லது அதிக அடிப்படை வேலைகள் மட்டும் தெரிந்தவர்களுக்காக வழங்கப்படும் அடிப்படை சம்பளம் இதுவாகும், '' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் 2025ஆம் ஆண்டிற்கான ஆசியான் ஒஎஸ்எச் சம்மிட் உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம், குறைந்தபட்ச மாத ஊதியம் குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலாளிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதையும் பெரிய நிறுவனங்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டதையும் அச்சந்திப்பில் அவர் விவரித்தார்.

எனினும், சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பிகேஎஸ் எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான புதிய குறைந்தபட்ச ஊதியம், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)