கோலாலம்பூர், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு தைப்பூச திருவிழாவின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஆலய நிர்வாகம் மற்றும் அமலாக்கத் தரப்பின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பக்தர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் அவ்வாறு அறிவுறுத்தினார்.
''இந்த ஆண்டும் மகா மாரியம்மன் தேவஸ்தானம் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேம்பாட்டு திட்டங்களையும் பத்துமலை திருத்தலத்தில் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆக, இங்கு வருகின்ற பக்தர்கள் பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் பின்பற்றினால் இது மிகச் சிறந்த தைப்பூசமாக பத்துமலை பக்திமலையாக தொடரும்,'' என்றார் அவர்.
அதேவேளையில், பத்துமலையில் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடரும் என்று தாம் நம்புவதாக டத்தோ ஶ்ரீ சரவணன் தெவித்தார்.
''தைப்பூசத்திற்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருந்தாலும் முன்கூட்டியே அதிகமான பக்தர்கள் திரள ஆரம்பித்துள்ளனர். அதே நேரத்தில், இலவச உணவு என்பது பக்தர்களின் பணச் சுமையைக் குறைப்பதற்கும் அவர்களுக்கு தொண்டு வழங்கும் வாய்ப்பு இது. இதை இவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார் சரவணன்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, இதற்கு முன்னர் நேர்த்திக் கடனை நிறைவேற்றி விட்டு, உணவு மற்றும் பானத்தைப் பெற கூட்ட நெரிசலில் காத்திருந்த அனுபவமே அன்னதானம் வழங்க தம்மை ஊக்குவித்ததாக கடந்த பத்து ஆண்டுகளாக பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் ஜீவா ராமக்கிருஷ்ணன் என்பவர் தெரிவித்தார்.
''பத்து ஆண்டுகளாக இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கு தண்ணீர் கிடைக்கவே கடினமாக இருந்தது. அதனால், நாங்கள் அன்னதானம் வழங்க முடிவு செய்தோம். ஒரே குடும்பமாக இணைந்து செய்து வருகிறோம்,'' என்றார் ஜீவா ராமக்கிருஷ்ணன்.
இந்த அன்னதானத்தை வழங்க சுமார் 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் செலவிடுவதாகக் கூறிய அவர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தமது நண்பர்களும் உறுதுணையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)