உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ; இரு பெரிய வகை தீச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டன

23/01/2025 07:11 PM

காஸ்டிக், 23 ஜனவரி (பெர்னாமா) --   லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடப் பகுதியில், நேற்று சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் 3,407 ஏக்கர் எரிந்து சேதமுற்றது.

மேலும், நகரப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக எரிந்து கொண்டிருந்த இரண்டு மிக மோசமான தீ சம்பவங்கள், கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

இத்தீச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் இடமாற்றம் செய்வதற்கான உத்தரவுகளின் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்து வெளியிடவில்லை.

எனினும், காஸ்டிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 18,600 பேர் அங்கு வசிக்கின்றனர்.

இத்தீச் சம்பவத்தினால், சான் கேப்ரியல் மலைகளில் உள்ள ஏழு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பூங்கா பார்வையாளர்களுக்கு முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க வனத்துறை தெரிவித்துள்ளது.

புதிய இடங்களில் தீ பரவியிருந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸை சேதப்படுத்திய இரு கோர தீச் சம்பவங்களும் முடிந்த அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கலிபோர்னிய வனவியல் மற்றும் தீயணைப்பு பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 7ஆம் தேதி தொடங்கிய இத்தீச்சம்பவங்களினால் இதுவரை 28 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்கே 14,021 ஏக்கர் பரப்பளவைச் சாம்பலாக்கிய ஈட்டன் தீ 91 விழுக்காட்டளவு கட்டுப்படுத்தப்பட்டது.

அதேவேளையில், லாஸ் ஏஞ்சல்ஸின் மேற்குப் பகுதியில் 23,448 ஏக்கர் பரப்பளவை எரித்த பெரிய பாலிசேட்ஸ் தீ 68 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)