பொது

பத்துமலை ஆலய வளாகத்தின் நடைப்பாதை நிலையை அமைச்சர் நந்தா லிங்கி பார்வையிட்டார்

23/01/2025 09:13 PM

பத்துகேவ்ஸ், 23 ஜனவரி (பெர்னாமா) - பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலை சுற்றியுள்ள பகுதியை குறிப்பாக வழிபாட்டுப் பகுதிக்குள் நுழையும் நடைபாதையின் நிலையை பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி நேரில் சென்று பார்வையிட்டார்.

கோயிலின் நுழைவுப் பகுதியைச் சுற்றியுள்ள நடைபாதை சேதமடைந்து பராமரிப்பின்றி இருப்பது குறித்து ஆலயத் தரப்பிலிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து தாம் அங்கு வந்ததாக அவர் கூறினார்.

இங்கு வந்து பார்த்த போது பாதையைப் பயன்படுத்தும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பாதைக்கு உடனடி பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் அவசியம் என்பதை தாம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அசம்பாவிதம் நிகழும் வரை காத்திராமல் அதற்கு முன்னதாகவே இப்பாதையை பராமரிப்பது மிகவும் நல்லது என்று தெரிவித்த அவர், தைப்பூசமும் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவுபடுத்தினார்.

மேலும், ஆண்டுதோறும் தைப்பூசத்தை விமரிசையாக கொண்டாடும் இவ்வாலயத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் திரள்வார்கள் என்று தேவஸ்தானம் கணித்துள்ளது. 

எனவே, தைப்பூச திருவிழாவிற்கு முன்னதாக சுற்றுவட்டாரப் பகுதி உள்ளிட்ட பழுதடைந்த வழித்தடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜே.கே.ஆர். உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)