கோத்தா பாரு, 25 ஜனவரி (பெர்னாமா) -- இன்று அதிகாலை, கிளந்தான் ஜாலான் கோலா கிராய் - குவா மூசாங்கில், பத்து டன் எடை கொண்ட லாரியும் பெரோடுவா ரக காரும் விபத்துக்குள்ளானதில், தந்தை ஒருவரும் அவரின் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன், கோலா கிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு உறுப்பினர்கள், 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கிளந்தான் மாநில பேச்சாளர் தெரிவித்தார்.
அதிகாலை மணி 4.51-க்கு சம்பவ இடத்தை அடைந்த அவர்கள், பெரோடுவா ரகக் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், அதன் ஓட்டுநர் இருக்கையில் ஆடவர் ஒருவர் சிக்கிக் கொண்டிருந்ததையும் கண்டதாக அப்பேச்சாளர் கூறினார்.
அதோடு, பெண் ஒருவர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் கிடந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த அவ்வாடவரை சிறப்பு கருவியைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வந்தபோதிலும், அவர் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரி ஒருவர் அதிகாலை மணி ஐந்துக்கு உறுதிபடுத்தினார்.
தூக்கி வீசப்பட்ட அப்பெண்ணும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)