பெட்டாலிங் ஜெயா, 25 ஜனவரி (பெர்னாமா) -- அண்மையில், சிலாங்கூர் பண்டார் சன்வேயில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற Pinkfish இசை நிகழ்ச்சியில், போதைப் பொருளை விற்றதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் கைது செய்தது.
ஜனவரி எட்டிலிருந்து 12-ஆம் தேதிகளுக்கு இடையில், 20-இல் இருந்து 30 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
''அவர்கள் விற்பனையாளர்கள். சிறிய குழுக்கள் அளவில் விற்பவர்கள். ஆனால், இசை நிகழ்ச்சிகளில் அவர்கள் தனியாக விற்பார்கள். அந்த மூவரில் ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார். அங்கு விற்றும் இருக்கிறார். ஆனால், சிலர் வெளியிருந்தே வாங்கி அந்த இசை நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்,'' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், நியூ பந்தாய் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையின் PJS2 toll சாவடியில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் ஹுசேன் ஒமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான நிபந்தனைகளையும், இனி தமது தரப்பு கடுமையாக்கும் என்று அவர் கூறினார்.
அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுவர் போதைப் பொருள் உட்கொண்டதினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக போலீஸ் ஆறு புகார்களை பெற்றிருந்தது.
அவர்களின் நால்வர் உயிரிழந்த வேளையில், மூவர் குணமடைந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)