பொது

சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை

26/01/2025 04:51 PM

கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) --   பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் சட்டவிரோதமாக டீசலைப் பதுக்கி வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பகுதியில் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு, கேபிடிஎன் அதிரடி சோதனை நடத்தியது.

பொதுமக்கள் அளித்த புகார் மற்றும் அமலாகத் தரப்பு மேற்கொண்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையில், கடந்த ஜனவரி 23-ஆம் தேதி இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, கேபிடிஎன் அமலாக்க பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் துவான் ஷம்சூல் நிசாம் கலில் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

குழாய் பொருத்தப்பட்டிருந்த நான்கு சேகரிப்பு கலன்களில் 25,000 லிட்டர் டீசல் மற்றும் 16,000 லிட்டர் பெட்ரோல் அடங்கிய எரிபொருளைத் தங்கள் தரப்பு கண்டறிந்ததாக துவான் ஷம்சூல் நிசாம் கூறினார்.

அதேவேளையில், ஐபிசி கொள்கலன்கள் அடங்கிய ஐந்து லாரிகளையும் அமலாக்கத் தரப்பினர் கண்டறிந்த வேளையில், அவற்றில் இரு லாரிகள் 4,000 லிட்டர் டீசல் மற்றும் 1,000 லிட்டர் பெட்ரோலைச் சேகரிப்பு கலன்களுக்கு மாற்றும் செயல்முறையில் ஈடுப்பட்டு கொண்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அதிகாலையும் பினாங்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்கள் சிலவற்றிலிருந்து எரிபொருளைப் பெறும் அக்கும்பல், சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவற்றை மீண்டும் சந்தையில் விற்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

1961-ஆம் ஆண்டு கையிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் செக்‌ஷன் 21 (1)-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)