செகாம்புட், 27 ஜனவரி (பெர்னாமா) -- சிறந்த வாய்ப்புகளைப் பெறும் நோக்கத்துடன் நாட்டின் முன்னாள் விளையாட்டாளர்களும் பயிற்சியாளர்களும் வெளிநாடுகளுக்கு மாற்றலாகிச் செல்வது கவலையளிக்கும் வகையில் உள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வழங்கப்படும் சலுகைகளுக்கு ஈடான சலுகையை இங்கு வழங்குவது கடினம் என்பதை ஒப்புக்கொண்ட ஹன்னா யோ, அவர்கள் மலேசியாவில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்க, சமமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
''முக்கியமானது என்னவென்றால் மலேசியாவில் ஊதியத் திட்டம் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். அவர்கள் சீனா, அமெரிக்காவிற்குச் செல்வதை என்னால் தடுக்க முடியாது. எல்லாம் அனுபவத்தைப் பெறுவதற்காகத்தான். ஆனால் இங்கேயே இருப்பவர்களை நாங்கள் ஈர்க்க விரும்புகிறோம்'' என்றார் அவர்
கோலாலம்பூரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர்களின் அந்த முடிவு, மலேசிய விளையாட்டுத் துறையின் போட்டித்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பும் என்பதையும் ஹன்னா சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)