கோலாலம்பூர், 04 பிப்ரவரி (பெர்னாமா) -- பயனீட்டாளர்கள் குறிப்பாக அரிசி விலை தொடர்பான தாக்கத்தை ஈடுசெய்ய கூடுதல் மானியங்களுடன் நெல் கொள்முதல் அடிப்படை விலையை அரசாங்கம் அடுத்த வாரம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை விலை உயர்வு தொடர்பான விளக்கம் மற்றும் அறிவிப்பு தொடர்பான அமைச்சர் அறிக்கையை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு சமர்ப்பிப்பார் என்று பிரதமர் கூறினார்.
''இந்த அதிகரிப்பின் காரணமாக, பயனீட்டாளர்களுக்கான விலையை ஒரே நேரத்தில் அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை. விலை உயர்வு அவசியம் என்று நான் கருதுகிறேன். இரண்டாவதாக, 6 மாதங்களுக்கு 15 கோடி ரிங்கிட் மானியத்தையும் அதிகரிக்க வேண்டும். நாம் ஒரு தரப்போடு பேச முடியாது. பயனீட்டாளர்களையோ அல்லது விவசாயிகளையோ நாம் பாதிக்கக் கூடாது. ஏனென்றால் பி40 பிரிவில் பல ஏழை பயனீட்டாளர்கள் உள்ளனர்,'' என்றார் அவர்.
2014-ஆம் ஆண்டு முதல் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,200 ரிங்கிட்டாக இருந்த நெல் கொள்முதல் அடிப்படை விலையை, 2023-ஆம் ஆண்டில் அரசாங்கம் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,300 ரிங்கிட்டாக உயர்த்தியது.
இருப்பினும், அந்த விலையை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,800 ரிங்கிட்டாக உயர்த்தும் பரிந்துரையை அரசாங்கம் ஆலோசிக்க வேண்டும் என்று மலேசிய நெல் விவசாயிகள் சகோதரத்துவ சங்கம், PeSAWAH அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]