சிறப்புச் செய்தி

பத்துமலையில் டன் கணக்கில் கைவிடப்பட்ட செருப்புகளும் காலணிகளும்

15/02/2025 08:25 PM

பத்துமலை, 15 பிப்ரவரி (பெர்னாமா) -  தைப்பூசத்திற்கு பிறகு பத்துமலைத் திருத்தலத்தில் குப்பைக் கூலங்கள் ஆங்காங்கே காணப்பட்டாலும் ஆலயத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான காலணிகளும் செருப்புகளும் விட்டுச் செல்லப்படுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் தைப்பூசத்திற்குப் பின்னர் நான்கு டன் எடையிலான காலணிகளை ஆலய நிர்வாகம் அப்புறப்படுத்தியிருந்த வேளையில், இவ்வாண்டு 35 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேலாக செலவு செய்து சுமார் மூன்று டன்னுக்கும் அதிகமான கைவிடப்பட்ட செருப்புகளையும் காலணிகளையும் அப்புறப்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் இவ்விவகாரம் தொடர்கதையாக நீடிப்பதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு குறித்து இன்று பல தரப்பினரை அணுகி பெர்னாமா செய்திகள் தகவல்களை கேட்டறிந்தது.

விநாயகர் ஆலய முன்புறத்திலும் மலையேறும் அடிவாரத்திலும் காலணிகளும் செருப்புகளும் குவிந்து கிடப்பதை பெர்னாமா செய்திகள் ஒளிப்பதிவு செய்தது.

அதிலும் விநாயகர் ஆலயத்தின் முன்புறத்தில் இருக்கும் தேங்காய் உடைக்கும் இடத்தில் காலணிகள் குவிந்து கிடப்பதினால், அங்கு நேர்த்திக் கடன் செய்யும் பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மக்களின் அலட்சியப் போக்கைத் தவிர்ப்பது கடினம் என்றாலும், இதைக் களைவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று பொதுமக்களில் சிலர் ஆலோசனைத் தெரிவித்தனர்.

''தைப்பூசம் அன்று இங்கு கூட்டம் அலைமோதும் என்பதால் அந்த சமயத்தில் இது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் செய்ய முடியாது. ஆனால் முடிந்தவரை நுழைவாயிலுக்குள் நுழைவதற்குள் பக்தர்களும் நேர்த்திக் கடன் செலுத்துபவர்களின் காலணியை கழற்றிவிட்டு வரச் சொன்னால் உள்ளே செருப்புகள் மலைப்போல குவியாது,'' என்று சிரம்பானைச் சேர்ந்த இராமச்சந்திரன்  இராமசாமி தெரிவித்தார்.

''இந்தியாவில் உள்ள பெரிய ஆலயங்களில் உள்ளது போன்று இங்கும் காலணி வைப்பதற்கான அறையை ஏற்பாடு செய்தால் இவ்விகாரத்திற்குத் தீர்வு பிறக்கும். இல்லையேல் ஆலயத்தில் வருவோர் தான் தோன்றித் தனமாக காலணிகளை அங்கும் இங்கும் போட்டுவிட்டுச் செல்வர்,'' என்று நெகிரி செம்பிலான், பாஜாமைச் சேர்ந்த மகேஸ்வரி கிருஷ்ணன் கூறினார்.

''இதுபோன்ற வேளைகளில் கைவிடப்பட்ட காலணிகளை வெறுமனே வீசாமல் அதற்கான ஜோடிக் காலணியைத் தேடி ஆசிரமத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லாதாரோக்கு அதை வழங்கினால் அவர்களாவது பலனடைவார்கள்,'' என்று புத்ராஜெயாவைச் சேர்ந்த பிரடீப் பத்மநாதன் தெரிவித்தார்.

பக்தர்களின் இந்த ஆலோசனைகள் குறித்து கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா கருத்து கேட்கப்பட்டது.

''மக்கள் சொல்லும் கருத்து ஏற்புடையது என்றாலும் அதை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக காலணி வைப்பதற்கு அறை அமைத்தால் அது இடத்தை நெருக்குவதோடு மேலும் நெரிசலை ஏற்படுத்தும். அதேவேளையில் காலணியை அப்புறப்படுத்தும் குத்தகை தொழிலாளர்கள் முடிந்தவரை இயந்திரத்தைக் கொண்டு அதை சுத்தப்படுத்துவார்கள். அந்த சமயத்தில் காலணியின் ஜோடியைத் தேடுவதற்கெல்லாம் அவகாசம் இருக்காது. இன்னும் சில பேர் தீட்டுக் கழிப்பதற்காக ஆலயத்திற்கு வந்துவிட்டு பாதணியை விட்டுச் செல்வர். அவ்வாறு தீட்டு கழிப்பவர்கள் கோயிலில் காலணியைப் போடக் கூடாது. மாறாக குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்,'' என்று சிவகுமார் விவரித்தார்.

அவர் கூறுவது போல, தீட்டுக் கழிப்பதற்கும், கோவிலில் காலணிகளை  விட்டுச் செல்வதற்கு தொடர்பு உள்ளதா? 

இக்கேள்விக்கு பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் தேவஸ்தானத்தின் தலைமை குருக்கள் இரவிநாத சிவாச்சாரியார் பதில் அளித்தார்.

''இறைவனை உளமாற வழிபடும்போது காலணியோ அல்லது செருப்போ அணிந்திருக்க கூடாது என்பது ஐதீகமாக இருந்தாலும், அதற்கு செருப்பை ஆலய வளாகத்திலே அப்படியே விட்டுச் செல்வதுதான் தவறு,'' என்றார் அவர்.

மேலும் தூய்மையான இடத்தில் மட்டுமே இறைவனை பூஜிப்பது சிறந்தது என்று இந்து மத ஆகமங்கள் கூறுகின்றன.

தூய்மை, நாகரிகம் அடைந்த மக்களின் அடிப்படை அம்சமாக இருப்பதால், அடுத்தாண்டு தைப்பூசத்திலாவது இவ்விவகாரத்திற்கு விடியலை எதிர்ப்பார்ப்போம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)