பொது

குழந்தைகளை வேப் பழக்கத்திற்கு வித்திடும் வேப் வடிவிலான மிட்டாய்

09/03/2025 04:18 PM

ஜார்ஜ்டவுன், 09 மார்ச் (பெர்னாமா) -- மின்னியல் சிகரேட் எனப்படும் வேப் வடிவிலான புதிய வகை மிட்டாய்கள் தற்போது சந்தையில் விற்கப்படுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

குழந்தை பருவத்திலேயே வேப் பற்றி அறிந்து கொள்ளவதற்கு பலவித கவரும் வண்ணங்களிலான இந்த மிட்டாய்கள் வழிவகுப்பதாகக் கூறுகின்றார், அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ்.

வேப் வடிவிலான மிட்டாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான வேப் புகைப்போரை இளம் வயதிலேயே உருவாக்கும் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.

இந்த மிட்டாய்களை மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் வாங்குவதாக அவர் கூறினார்.

''சிறு குழந்தைகளுக்கு வேப் வடிவில் மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிள்ளைகள் இதை வாங்கி உண்பதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார் அவர்.

மூன்று அல்லது நான்கு வயதிலான அக்குழந்தைகள் இந்த மிட்டாய்களை உண்ணும் பட்சத்தில், ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும்போது அசலான வேப் பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 

அதேவேளையில், போதைப் பித்தர்கள் பயன்படுத்தும் ஊசி வடிவிலான சாக்லேட்களும் தற்போது விற்படுவதாக சுப்பாராவ் குறிப்பிட்டார். 

''ஊசி வடிவிலான சாக்லேட்டுகளை உண்ணும்போது பெரியவர்களாக வளர்ந்த பின்னர் ஊசி வடிவிலான போதைப் பொருளை பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கின்றது. இதனால் அவர்களின் ஆரோக்கியம் நாளடைவில் சீர்கெட்டு போகும்,'' என்று அவர் எச்சரித்தார்.

இதுபோன்ற உணவுப் பண்டங்களுக்கான அனுமதி குறித்து அவர் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த தயாரிப்புகளில் எந்தவொரு விவரமும் அச்சிடப்படவில்லை என்பதும் கவலையளிப்பதாக அவர் கூறினார். 

எனவே, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமலாக்கத் தரப்பினர் இதற்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்று சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]