கோலாலம்பூர், 12 மார்ச் (பெர்னாமா) - பல்வேறு பின்னணிகள், மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவ அனைத்து தரப்பினரும் ஒருமைப்பாட்டு முகவர்களாக செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை, அங்காசாபூரியில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற நோன்புத் துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அக்கருத்தை முன்வைத்ததாக பிரதமரின் மூத்த பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா கூறினார்.
"அவர், அந்த மூன்று வானொலி தொகுப்பாளர்களைச் சந்தித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தின்போது, பிரதமர் அவர்களுக்கு அறிவுரை வழங்க முடிந்தது. மேலும், அந்த வானொலி நிலையத்தில் தங்களின் அன்றாடப் பணிகளில், ஒற்றுமைக் கருத்துகளை எப்போதும் முன்வைக்கும்படியும் வலியுறுத்தினார். பிரதமரின் செய்தி அவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்," என்றார் அவர்.
இன்று, முகநூலில் நேரலையாக நடைபெற்ற பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பின்போது துங்கு நஸ்ருல் அதனைத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஒவ்வொரு மலேசியரும் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் நம்புகிறார்.
எந்தவொரு எதிர்மறை கூற்றுகளையும் அல்லது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் முயற்சிகளையும் நிறுத்திய அனைத்து தரப்பினருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் தனது நன்றியைத் தெரிவித்ததாக நஸ்ருல் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)