பாலி, 03 ஜூலை (பெர்னாமா) -- இந்தோனேசியா, பாலி தீவில் 65 பேரை ஏற்றிச் சென்ற ஃபெரி மூழ்கியதில் குறைந்தது நால்வர் மரணமடைந்த நிலையில், 38 பேரைக் காணவில்லை.
இதுவரை ஓர் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் இந்தோனேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது.
காணாமல் போன 38 பேரை தேடும் பணி தொடரப்பட்டு வருகிறது.
கிழக்கு Java பகுதியான கெதாப்பாங் துறைமுகத்திலிருந்து பயணத்தைத் தொடங்கிய கே.எம்.பி துனு பெர்தமா ஜெயா எனும் அந்த ஃபெரி 30 நிமிடங்களில் நீரில் மூழ்கியதாக அந்நிறுவனம் கூறியது.
அதில் பயணித்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படாத நிலையில், வெளிநாட்டினர் யாரும் அதில் பயணிக்கவில்லை என்று உள்ளூர் தொலைக்காட்சியான மெட்ரோ தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டிருக்கும் இந்தோனேசியாவில் படகு போக்குவரத்து பொதுவான ஒன்றாகும்.
எனினும், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் அதிகச் சுமையை ஏற்றுவதாலும் அந்நாட்டில் படகுகள் சார்ந்த விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)