கோலாலம்பூர், 03 ஜூலை (பெர்னாமா) -- தேசிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரையில் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முஹமட் ஹஷிம், அரசியலமைப்பின் கீழுள்ள செயல்பாடுகள் உட்பட அதன் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை ஆற்றுவார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 131A மற்றும் 1964-ஆம் ஆண்டு நீதித்துறை நீதிமன்றச் சட்டம், செக்ஷன் 9(1) (b) மற்றும் செக்ஷன் 9(3)-க்கு ஏற்ப அப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூட்டரசு நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அலுவலகம் அறிவித்தது.
நீதியின் பாதுகாவலரான மலேசிய நீதித்துறை, எப்போதும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக செயல்படுவதோடு மக்களுக்கும் நாட்டிற்கும் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவையாற்றும் என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த அலுவலகம் விவரித்தது.
கடந்த மே 15-ஆம் தேதி 66 வயதான டான் ஶ்ரீ ஹஸ்னா கட்டாய பணி ஓய்வு பெற்ற வேளையில், அவரின் பணிக்காலம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியை வகித்த முதல் பெண்ணான துன் தெங்கு மைமுன் துவான் மாட் புதன்கிழமை பணி ஓய்வு பெற்றதை அடுத்து தேசிய தலைமை நீதிபதி பதவி காலியானது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)