பட்டர்வொர்த், 03 ஜூலை (பெர்னாமா) -- பினாங்கில், விரைவு மற்றும் சுற்றுலாப் பேருந்துகளின் ஓட்டுநர்களும் பயணிகளும் வாகன இருக்கை பட்டை, Seat Belt அணிந்துக் கொள்ளும் உத்தரவு இணக்க விகிதம் நிறைவளிப்பதாக அம்மாநில சாலை போக்குவரத்துத் துறை ஜேபிஜே கூறியது.
அவ்விதிமுறை உத்தரவு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய் தொடங்கி தங்கள் தரப்பு மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் அது கண்டறியப்பட்டதாக பினாங்கு ஜேபிஜே இயக்குனர் சுல்கிஃப்ளி இஸ்மாடில் கூறினார்.
மொத்தம் 125 விரைவுப் பேருந்துகள் மற்றும் 43 சுற்றுலாப் பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஒரு விரைவு பேருந்து ஓட்டுநர் மற்றும் இரு பயணிகளை உட்படுத்தி மூன்று சம்மன்கள் வழங்கப்பட்டதாக சுல்கிஃப்ளி இஸ்மாடில் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை, தெற்கு நோக்கிச் செல்லும் சுங்கை டுவா டோல் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் பேருந்து ஓட்டுநர் ஒருவரும், ஈப்போவிலிருந்து பட்டர்வொர்த் செல்லும் பேருந்தில் பயணித்த இரு பயணிகள், விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது.
"பயணத்தின் போது எங்கள் அதிகாரிகளை பேருந்தில் பணியமர்த்துவோம். அதன் வழி, அவர்கள் ஓட்டுநர் மற்றும் பயணிகளைக் கண்காணிக்க முடியும்", என்றார் அவர்.
நேற்றிரவு, பினாங்கு சென்ட்ரல் பேருந்து முனையத்தில் விரைவு மற்றும் சுற்றுலா பேருந்துகளில் வாகன இருக்கை பட்டை அணியும் சிறப்பு சோதனை நடவடிக்கைக்குப் பின்னர், சுல்கிஃப்ளி செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)