கோலாலம்பூர், 03 ஜூலை (பெர்னாமா) -- ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பான அறிக்கையை, அண்மையில் தாம் பெற்றதாகவும் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் முன்னர் தமது தரப்பு ஆய்வு செய்து வருவதாகவும் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.
''உண்மையிலேயே அதன் முழுமையான அறிக்கையை இப்போதுதான் பெற்றுள்ளேன். மேலும், அந்த நில அமிழ்வு ஏன் ஏற்பட்டது என்பது உட்பட பல விஷயங்களை நாம் ஆராய்ந்து வருகிறோம். அதன் பிறகு, அந்த விவகாரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கிறேன்'', என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற Mata Hati Wilayah திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர், டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் விழுந்த விஜயலெட்சுமி எனும் இந்திய பிரஜை காணாமல் போனார்.
அவரை கண்டுபிடிக்க பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)