திருச்செந்தூர், 07 ஜூலை (பெர்னாமா) -- தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மஹாகும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் மண்ணில் 157 அடி உயர கோபுரத்தோடும் ஒன்பது தளங்களோடும் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
திருச்செந்தூர் முருகனுக்கு இறுதியாக, 2009-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
இதற்காக கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது.
காலை மணி 6 30 அளவில் ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடைபெற்ற பின்னர் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.
விண்ணை பிளக்கும் அளவு பக்தர்களின் 'அரோகரா' முழக்கத்துடன், மந்திரங்கள் ஓதி, மங்கள வாத்தியங்களுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைக் காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட வேளையில், மக்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
பாதுகாப்புக்காக கோவில் வளாகத்தில் 6 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)