ஜோகூர் பாரு, 18 ஜூலை (பெர்னாமா) -- ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஜோகூர் பாரு, ஸ்கூடாய், தாமான் உங்கு அமினாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனித்து வாழும் தாய் ஒருவரையும் தமது நண்பரையும் கொலை செய்த குற்றச்சாட்டுகளிலிருந்து தொழிலாளி ஒருவரை, ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது.
குற்றம்சாட்டப்பட்ட எம். ஜெயகுமாருக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ அபு பாக்கார் கத்தார் அந்த தீர்ப்பை வழங்கினார்.
முறையே 51 மற்றும் 59 வயதான கே. கமலா மற்றும் எஸ். செல்வராஜ் ஆகியோரின் மரணம் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஏற்படுத்திய காயங்களால் ஏற்பட்டது என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி டத்தோ அபு பாக்கார் தமது தீர்ப்பில் விவரித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் உடைகளிலோ அல்லது பிற பொருட்களிலோ இறந்தவர்களின் இரத்த கரைகள் எதுவும் காணப்படவில்லை என்பதை நீதிமன்றம் பரிசீலித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், மரபணு பரிசோதனை, டி.என்.ஏ-வை மேற்கொள்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவரின் உடைகளையும் பொருட்களையும் விசாரணை அதிகாரி எடுத்துச் செல்லவில்லை என்பதையும் நீதிபதி தமது வாதத்தில் குறிப்பிட்டார்.
கமலா அணிந்திருந்த நகைகளை அடகு வைத்த குற்றத்தையும் அரசு தரப்பு நிரூபிக்க தவறியுள்ளது.
2018-ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் முதலாம் தேதி வரை, தாமான் உங்கு அமினா, ஜாலான் ஹாங் ஜெபாட், எண் 14-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கமலா மற்றும் செல்வராஜ் ஆகியோரை கொலை செய்ததாக ஜெயகுமார் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மரண தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]