பெர்மாதாங் பாவ், 19 ஜூலை (பெர்னாமா) - வாழ்க்கைச் செலவினத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மக்கள் சுமையைக் குறைக்கவும் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் உடனடியாக அறிவிக்கக்கூடிய திட்டங்களை நிதி அமைச்சு தற்போது ஆலோசித்து வருவதாக அன்வார் கூறினார்.
"தற்போது, பிரதமர் இந்தக் குறுகிய காலத்தில் என்ன அறிவிக்க முடியும் என்பதைக் கண்டறிய நிதி அமைச்சு ஒவ்வொரு நாளும் பணியாற்றி வருகிறது. ஓர் அறிவிப்பு இருக்கும் என்று நான் உங்களிடம் கூறினேன். அது அறிவிக்கப்படும்போது, அறிவிப்புக் கொஞ்சம் பெரியதாக இருக்க வேண்டும். பிரச்சனையைச் சமாளிக்க. ஒருவேளை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம். இரண்டு, மூன்று நாள்கள் அவகாசம் கொடுங்கள். நான் அதை அறிவிப்பேன்," என்றார் அவர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை நாட்டின் நிதித் திறனுடன் சமநிலைப்படுத்துவதற்கான சிறந்த அணுகுமுறையைக் கண்டறிய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருவதாக பிரதமர் விவரித்தார்.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி மக்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பு உள்ளதாக பிரதமர் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)