Ad Banner
Ad Banner
 பொது

பினாங்கு: தீபாவளியின் போது அம்மாநில இந்தியர்களுக்கு மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதி

21/07/2025 07:02 PM

ஜார்ஜ்டவுன், 21 ஜூலை (பெர்னாமா) --   தீபாவளி காலகட்டத்தில் பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்திய வர்த்தகர்கள் மட்டுமே விற்பனைச் சந்தைகளை நடத்த முடியும் என்ற கொள்கையை அம்மாநில அரசாங்கம் வகுத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு வர்த்தகர்களின் வருகை குறித்து பினாங்கு இந்திய தொழிலியல் வர்த்தக சம்மேளனம், PICCI பிரதிநிதிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் கூறினார்.

உள்ளூர் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மாநில அரசாங்கம் அதற்கான வழிகாட்டியை வகுத்திருப்பதாக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

''காரணம், ஆண்டு முழுவதும் இங்கு வசிக்கும் உள்ளூர் வர்த்தகடர்கள் வாடகை செலுத்த வேண்டும். வரி செலுத்த வேண்டும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த என்ன வேண்டுமானாலும் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் வருடத்தின் நல்ல மாதமாக இருக்காது, அவர்கள் சிறந்த வியாபாரத்தைப் பெற தீபாவளி கொண்டாட்டம் வரும் வரை காத்திருக்கிறார்கள்'', என்றார் அவர்.

பினாங்கு, கொம்தாரில் இன்று, 2030 பினாங்கு குறும்படத் தொடர் குறித்த செய்தியாளர் சந்திப்பில் சௌ கோன் இயோவ் அவ்வாறு கூறினார்.

அண்மையில், புக்கிட் மெர்தாஜாமில் நடைபெற்ற இந்திய விற்பனைச் சந்தையில் செபராங் பிறை மாநகர் மன்றம் எம்.பி.எஸ்.பி, வர்த்தகர்களுக்கு சம்மன் வழங்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களிலும் பரவலானது குறித்து சௌ செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

அந்த காணொளியில் பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு அமலாக்க அதிகாரிகள் சம்மன் வழங்கும்போது, அவர்கள் பினாங்கில் வசிப்பவர்கள் அல்ல என்றும், அங்கு விற்பனை செய்வது குற்றம் என்பது உட்பட இரண்டு விதிமுறைகளை மீறியதாக சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், தீபாவளி விற்பனை காலங்களுக்கு அப்பாற்பட்டு, அந்நிய நாட்டு வர்த்தகர்கள், வியாபாரம் செய்யவோ அல்லது விற்பனைச் சந்தைகளை ஏற்பாடு செய்யவோ இன்னும் அனுமதிக்கப்படுவதாக சோவ் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)