Ad Banner
Ad Banner
 பொது

தானியங்கி வாயில் அமைப்பில் தடை; சதிநாசவேலை கண்டறியப்படவில்லை 

20/07/2025 07:08 PM

சிப்பாங், 20 ஜூலை (பெர்னாமா) - வெளிநாட்டு வருகையாளர்களுக்கான தானியங்கி வாயில் அமைப்பில் தடை ஏற்பட்டதற்கு சதிநாசவேலை அல்லது இணைய தாக்குதலின் அறிகுறிகள் இருப்பது எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

மலேசியக் குடிநுழைவுச் செயல் முறை MyIMMs-க்கும், அனைத்துலக அமலாக்க நிறுவனத்தின் பாதுகாப்பு தரவுத் தளத்திற்கும் இடையிலான தரவு ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இப்பிரச்சனை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இதனால், அதன் செயல்முறையில் தாமதம் ஏற்பட்டதாக மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம், AKPS-யின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்.  

''நாம் இன்னும் அவ்விவகாரத்தைப் பார்க்கிறோம். தற்போது நாம் அதைப் பார்க்கவில்லை. எனவே, இப்போதைக்கு நான் எந்த அனுமானங்களையும் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், அது சூழ்நிலையை இன்னும் மோசமாக்கவில்லை. தற்போதைக்கு நாம் வேலையைச் செய்வோம். உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவோம்,'' என்றார் அவர்.

இதுவரை, இணையத் தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் தங்கள் தரப்பிற்குக் கிடைக்கவில்லை என்றும், அதன் உண்மையானக் காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முஹமட் ஷுஹாய்லி கூறினார்.

இன்று சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-யில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட வெளிநாட்டு வருகையாளர்களுக்கான அனைத்து தானியங்கி வாயில் அமைப்புகளும் தற்போது முழுமையாக செயல்படத் தொடங்கியிருப்பதாக, அவர் தெரிவித்தார்.

மேலும், இக்கோளாறினால் மக்கள் எதிர்நோக்கிய சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட Mohd Shuhaily, இத்தகையத் தவறு மீண்டும் ஏற்படாமல் இருக்க அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)