கோத்தா பாரு, 20 ஜூலை (பெர்னாமா) - தங்களின் கைத்தொலைப்பேசியில் ஆபாச படங்களையும் காணொளிகளையும் வைத்திருந்த குற்றத்தை இரண்டு உயர்கல்விக்கழக மாணவர்கள் உட்பட மூவர் ஒப்புக் கொண்டனர்.
அவர்களுக்கு, 3,000 முதல் 4,000 ரிங்கிட் வரை அபராதம் விதித்து இன்று கிளந்தான், கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாஜிஸ்திரேட் வான் முஹமட் இசாட் வான் அப்துல்லா முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அம்மூவரும் அதை புரிந்ததாக தலையசைத்தனர்.
22 வயதுடைய முஹமட் அல் அசாமுடின் அல் ஃபட்சில் மற்றும் 27 வயதுடைய முஹமட் ஷாமி ஃபிராஸ் முஹமட் ஜூரிஜிக்கு தலா 4,000 ரிங்கிட்டும் 47 வயதுடைய முஹமட் ஹனாஃப்பி இப்ராஹிமுக்கு 3,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி, கோத்தா பாரு, பஞ்சோர், கம்போங் பூலாவ் பெலாச்சானில் உள்ள வீடொன்றில் அதிகாலை 1.15 மணிக்கு அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.
அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 292-இன் கீழ் அவர்கள் மீது முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த செயல் ஒழுக்கக்கேடானது மற்றும் பொது விதிமுறைக்கு முரணானது என்பதால், சமூகத்திற்கு பாடமாக அமையக்கூடிய வகையில் தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என்று முன்னதாக, அரசு தரப்பு துணை வழக்கறிஞர்களான முஹமட் நட்சிர் மற்றும் நுர் ஹசிக்கா நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர்.
எனினும், தவற்றை திருத்திக் கொண்டு, தங்களை மாற்றி கொள்வதாக உறுதியளித்ததால், அவர்களுக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சோங் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)