கோலாலம்பூர், 22 ஜூலை (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடியும், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு இடையே தொடரப்பட்ட இரண்டு அவதூறு வழக்குகளை மீட்டுக் கொள்வதற்கான உடன்பாட்டை இன்று எட்டினர்.
"குட்டி" என்ற விவகாரம் தொடர்பில் அவதூறான கருத்துகளைக் கூறியதாக 73 வயதான டாக்டர் அஹ்மட் சாஹிட் மீது தொடுத்த வழக்கை, 100 வயதான துன் டாக்டர் மகாதீர் மீட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளையில், முன்னாள் பிரதமர் எனும் தமது பதவியைப் பயன்படுத்தி டாக்டர் மகாதீர், தனது நீதிமன்ற வழக்கில் தலையிட முற்பட்டதாக குற்றம் சாட்டி டாக்டர் அஹ்மட் சாஹிட் தாம் செய்த அவதூறு வழக்கையும் இன்று மீட்டுக் கொண்டார்.
அதோடு, கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் மகாதீர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அவர் மீட்டுக் கொண்டார்.
இரு தரப்பினரின் விண்ணப்பங்களையும் அனுமதித்த நீதித்துறை ஆணையர் கான் தெசியோங், செலவுகள் குறித்து எந்த உத்தரவும் இல்லாமல் வழக்குகளைத் தீர்க்க உத்தரவிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)