பாங்கி, 27 ஜூலை (பெர்னாமா) -- சரக்கு வாகனங்கள் மற்றும் விரைவு பேருந்துகள் சேவையை வழங்கும் 28 நிறுவனங்கள் நிலுவையில் உள்ள 34,000-க்கும் மேற்பட்ட சம்மன்களை செலுத்தியதால் சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே 62 லட்சம் ரிங்கிட்டை வசூலித்துள்ளது.
இத்தொகை 14 நாள்களுக்குள் வசூலிக்கப்பட்டதாக ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
இரண்டு வாரத்திற்குள் நிலுவையில் உள்ள சம்மன்களை செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு தீர்வுக் காண சம்பந்தப்பட்ட அந்நிறுவனங்கள் ஜே.பி.ஜே-வைத் தொடர்பு கொண்டதாக டத்தோ ஏடி ஃபட்லி கூறினார்.
''எனவே ஜே.பி.ஜே அளவில், அண்மைய பதிவுகளை வெளியிடவும் அவற்றை உடனடியாக எவ்வாறு தீர்ப்பது என்பதையும் நாங்கள் உதவுகிறோம். உண்மையில், அனைத்து நிறுவனங்களும் அந்தந்த நிலுவைத் தொகையைத் தீர்க்க விரும்புவதை நாங்கள் காண்கிறோம்,'' என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை, மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜே.பி.ஜே-வின் குடும்ப தினத்தில் கலந்து கொண்ட டத்தோ ஏடி செய்தியாளர்களிடம் பேசினார்.
சம்மன்களை செலுத்தாத நிறுவனத்தின் கீழ் உள்ள வாகனங்களை கருப்புப் பட்டியலில் இணைப்பதற்கு முன்னர் அவற்றை செலுத்துவதற்கு ஜூலை 9-ஆம் தேதி தொடங்கி ஒரு மாதக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]