Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

மாணவர்களைப் பாதிக்கும் மன அழுத்தம்; அலட்சியம் வேண்டாமென அறிவுறுத்து

25/07/2025 07:59 PM

கோலாலம்பூர், ஜூலை 25 (பெர்னாமா) -- கடந்த காலங்களைப் போன்று அதிகமான தேர்வுகளோ அல்லது கல்வி தொடர்பான அழுத்தங்களோ மாணவர்களிடையே இல்லை என்றாலும், இன்னமும் அதிகமான மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருவது மறுப்பதற்கில்லை.

அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 36,428 இடைநிலைப்பள்ளி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மனசோர்வு குறித்த சோதனையில், 1,020 பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

மன அழுத்தத்திற்கு ஆளான பிள்ளைகள், சில நாட்களுக்கு சோகத்தில் இருப்பார்கள் என்றும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்கள் எனவும் பெற்றோர் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறார், மனநல ஆலோசகரான டாக்டர் விக்னேசன் துரைசாமி.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் முதற்கட்ட அறிகுறிகள் குறித்து டாக்டர் விக்னேசன் விவரிக்கிறார்.

குறிப்பாக யாரும் அவர்களை மதிக்கமால் அல்லது அலட்சியப்படுத்தும்போது, அவர்களுக்குள் ஓர் ஏக்கம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த ஏக்கம் அவர்களிடையே இன்னும் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, அதன் விளைவும் இன்னும் மோசமாக இருக்கும் என்றும் டாக்டர் விக்னேசன் நினைவூட்டினார்.

அண்மையில் கல்வியமைச்சு மேற்கொண்ட ஆய்வின்படி, இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஐவரில் ஒரு மாணவருக்கு இந்த அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தைக் களையும் முதற்கட்ட முயற்சியாக பள்ளிகளில் மாணவர்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோடு, இவ்வகை பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்நோக்க நேர்ந்தால் அவர்கள் யாரை அணுக வேண்டும் என்பது குறித்தும் போதிக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் விக்னேசன் கூறினார்.

மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பெற்றோரோ அல்லது ஆசிரியர்களோ ஆரம்பக்கட்டத்திலே அறிந்திருந்தால், உடனே மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரை அணுக உதவ வேண்டும்.

தொடக்கக்கட்டத்திலேயே மாணவர்களுக்கு உரிய ஆலோசனையையும் சிகிச்சையையும் வழங்கினால் மிக விரைவில் அவர்கள் இப்பிரச்சனையிலிருந்து மீண்டு வரலாம் என்றும் டாக்டர் விக்னேசன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)