பெட்டாலிங் ஜெயா, 04 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தீபகற்ப மலேசியாவில் மூன்று, சபாவில் இரண்டு மற்றும் சரவாக்கில் ஒரு பகுதி என மொத்தம் ஆறு பகுதிகள் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கடுமையான வெப்பத்தைப் பதிவு செய்துள்ளதால், நாடு முழுவதும் வெப்ப வானிலையின் தாக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
கெடாவில் பண்டார் பாரு, பேராக்கில் தெமர்லோ, பகாங்கில் பித்தாஸ், சபாவில் தெனோம் மற்றும் சரவாக்கில் லிம்பாங் ஆகியவை கடுமையான வெப்பத்தைக் கொண்ட பகுதிகளாகும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா, மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் அதிகாரிகள் மூலம் அரசாங்கம் நெருக்கமான கண்காணிப்பைச் செயல்படுத்தி வருதாக தேசிய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுத் தலைவருமான டாக்டர் அஹ்மட் சாஹிட் கூறினார்.
''குறிப்பாக தோட்ட மண் நிறைந்த பகுதிகளில் தீ விபத்துகளைத் தடுக்க நாம் என்ன செய்கிறோம். தற்போது சுமார் 3,300 குழாய் கிணறுகள் ஏற்கனவே உள்ளன. தேவைப்பட்டால் தீயணைப்புத் துறையினரையே சுத்தம் செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்'', என்றார் அவர்.
இன்று பேராக் புக்கிட் மேரா அணையில் மேக விதைப்பு நடவடிக்கையில் பங்கேற்ற பின்னர், சுபாங் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, எந்தவொரு சாத்தியத்திற்கும் பொதுமக்கள் எப்போதும் தயாராக இருப்பதோடு, வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் நட்மா அறிவுறுத்தியுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், இன்று பேராக், புக்கிட் மேரா அணையில் மேற்கொண்ட 45 நிமிட மேக விதைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, பலத்த மழை பெய்ததாக, டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் கூறினார்.
"செயல்பாடுகள் முடிந்த சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, பலத்த மழை பெய்தது. இது கடவுளின் முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறிவியல் முயற்சி. அப்பகுதியில் உள்ள நெல் வயல்களின் நீர்ப்பாசனம், மீன்பிடி தொழில், சுற்றுலா மற்றும் நீர் குறைப்பு செயல்பாடுகளை இது நிவர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகின்றோம்", என்று அவர் கூறினார்.
இந்நடவடிக்கையை மேற்கொள்ள, முன்னதாக சுபாங் விமான தளத்திலிருந்து காலை 11.30 மணிக்கு டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட்டையும், தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சாவும் ஏற்றிக் கொண்டு, RMAF C-130 ரக விமானம் புறப்பட்டது.
நீடித்து வரும் வெப்பமான வானிலை மற்றும் அபாய மட்டத்தில் இருக்கும் அணை நீர்மட்ட நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா மற்றும் அரச மலேசிய ஆகாயப்படை உடன் இணைந்து நட்மா இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக, டாக்டர் அஹ்மாட் சாஹிட் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)