கோலாலம்பூர், 26 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியாவுக்கு, இன்று கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் தேசிய வரவேற்பு நல்கப்பட்டது.
காலை மணி 10-க்கு, தமது மகன் அப்துல் மாட்டீன் போல்கியாவுடன் வந்த சுல்தான் ஹசனல் போல்கியாவை, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் துங்கு தெமெங்கோங் ஜோகூர், துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தேசிய பண் ஒலிக்கப்பட்டு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கின.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்காக புருணை சுல்தான், சுல்தான் இப்ராஹிமுடன் சந்திப்பு நடத்தினார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில், அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார், மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் உட்பட மேலும் பல அமைச்சரவை உறுப்பினர்களும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர், மாமன்னர் ஏற்பாடு செய்திருந்த தேசிய விருந்தோம்பலில், புருணை அரசாங்க குழுவினர் கலந்து கொண்டனர்.
சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, சுல்தான் ஹசனல் போல்கியா நேற்று மலேசியா வந்தடைந்தார்.
இதனிடையே, நாளை நடைபெறவிருக்கும் மலேசியா-புருணை தலைவர்களுக்கான 26-ஆவது ஆலோசனை கூட்டம், ஏ.எல்.சி-இல், சுல்தான் ஹசனல் போல்கியா கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)