ஜோகூர் பாரு, 26 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஏற்பட்ட 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தொடர்ச்சியே இன்று காலை ஜோகூர் பாரு, சிகாமாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம் என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் கூறினார்.
தென் சிகாமாட்டிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், 2.33 டிகிரி வடக்கிற்கும், 102.79 டிகிரி கிழக்கிற்கு என 10 கிலோமீட்டர் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அம்மாநிலத்தின் பல பகுதிகள் உட்பட தென் பஹாங்கிலும் உணரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மெர்சிங் பிளவு மண்டலத்தில் நிகழ்ந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 24-ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தின் பின்விளைவு என்பதை ஆய்வுகள் கண்டறிந்ததாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் ஹிஷாம் குறிப்பிட்டிருந்தார்.
இது ஒரு பின் அதிர்வாக இருப்பதோடு, அதன் அளவு மிதமானதாகவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வப்போது, நிலநடுக்கத்தின் தற்போதைய நிலைமையை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, அண்மைய வானிலை நிலவரம் குறித்து மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது MYCUACA செயலி மூலம் பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதனிடையே, நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதங்கள் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)