ஜாலான் பார்லிமன், 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மக்களின் நல்வாழ்வுக்காக மிகவும் வசதியான குடியிருப்பு மறு நிர்மாணிப்புத் திட்டங்களுக்கு வாய்ப்பளிக்க, 2025-ஆம் ஆண்டு நகர்ப்புற புதுச்செயலாக்கம், பி.எஸ்.பி சட்ட மசோதா அமல்படுத்தப்பட வேண்டும்.
அடையாளச் சின்ன வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்களின் தேவைகளுக்கும் இடையில் நகர்ப்புற மேம்பாடு சமநிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
''அது மேற்கொள்ளப்பட வேண்டும். நகர்ப்புற வளர்ச்சிக்கு இரட்டை கோபுரங்கள் இருப்பதால், அனைத்தும் இருப்பதாக நாம் விட்டு விட முடியாது. போதுமான இடவசதியின்றி வாழ்வது முடியாது. அந்த அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும். எனவே, இந்த மசோதா மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, பெரும்பாலான மலாய்க்காரர்களுக்கு, காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் வசதியான வீடுகளைக் கட்ட அரசாங்கத்திற்கு வாய்ப்பளியுங்கள்'', என்றார் அவர்.
இன்று மக்களவையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடியிருப்பை வலுக்கட்டாயமாக இடித்து மீண்டும் கட்ட அனுமதிக்கும் பி.எஸ்.பி சட்ட மசோதா குறித்து கோலா திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஹ்மாட் அம்சாட் முஹமட்@ஹஷிம் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு பதிலளித்த டத்தோ ஸ்ரீ அன்வார், அவ்வாறு கூறினார்.
மக்கள் வீடமைப்புப் பிரச்சனை தமக்கு மிகவும் நெருக்கமானது என்றும், குறிப்பாக நாடு ஊக்கமளிக்கும் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது அரசாங்கம் இவ்விவகாரத்தைப் புறக்கணிக்க முடியாது என்று நிதியமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)