ஷா ஆலாம், 29 ஆகஸ்ட் (பெர்னாமா) - கடந்த 26ஆம் தேதி சபாக் பெர்ணாமில் உள்ள பள்ளி விடுதிக் கட்டிடத்திலிருந்து விழுந்து இறந்த மூன்றாம் படிவ மாணவர் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு இதுவரை 12 பேரை போலீசார் தடுத்து வைத்துள்ளதை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி உறுதிபடுத்தினார்.
சீரான முறையில் விசாரணை நடத்துவதற்கு போலீசாருக்கு அவகாசம் வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்ட அவர், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த எந்தத் தகவலையும் வழங்கவில்லை.
இச்சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெறவும், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சென்று காணவும், மாநில புறநகர் வட்டார மேம்பாடு, ஒருமைப்பாடு மற்றும் பயனீட்டாளர்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ரிசாம் இஸ்மாயிலிடம் தாம் உத்தரவிட்டிருந்ததாகவும் டத்தோ ஶ்ரீ அமிருடின் குறிப்பிட்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஷா ஆலம் மாநகராண்மைக்கழக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சொற்பொழிவுக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஸ்ரீ அமிருடின் அவ்வாறு கூறினார்.
மேலும், சிலாங்கூர் சுகாதாரத் துறை JKNS-சிடமிருந்து அறிக்கையைப் பெற்ற பின்னர், மாணவரின் நிலை குறித்த அண்மைய நிலவரங்களை மாநில பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழுத் தலைவர் ஜமாலியா ஜமாலுடின் வழங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பில், வாக்குமூலங்களைப் பதிவு செய்ய போலீசார் அழைத்தவர்களில் பள்ளி ஊழியர்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் முன்னதாக கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)